உங்கள் இலக்குகளுக்கான முதலீட்டுத் தொகுப்பை (portfolio) உருவாக்கும்போது, அதிக வருமானத்தை மட்டும் நோக்கமாகக் கொள்ளக் கூடாது. பணவீக்கத்தை மிஞ்சும் வளர்ச்சிக்கான வாய்ப்பையும், சந்தை ஏற்ற இறக்கத்தைத் தாங்கும் அமைப்பையும் ஒன்றாகக் கவனிக்க வேண்டும். கீழே உள்ள வயதுக்குழு வாரியான ஒதுக்கீடு ஒரு பொதுவான தொடக்க வழிகாட்டி மட்டுமே; தனிப்பட்ட முதலீட்டு ஆலோசனை அல்ல.
முதலீட்டின் அடிப்படைக் கொள்கைகள்
1. பணவீக்கத்தை மிஞ்சும் வளர்ச்சியை நோக்குங்கள்
காலப்போக்கில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை உயர்வதால், பணத்தின் வாங்கும் திறன் குறைகிறது. இதை எதிர்கொள்ள, முதலீடு செய்யும் தொகையை அதிகரிப்பதோடு, அதனை நீண்டகால வளர்ச்சி வாய்ப்புள்ள சொத்து வகைகளில் முதலீடு செய்வதையும் உறுதி செய்க. முடிந்தவரை இவற்றில் ஒன்றை மட்டும் அல்ல, இரண்டையும் செய்யுங்கள்.
பணவீக்கக் கணிப்பானில் இன்றைய செலவு எதிர்காலத்தில் எவ்வளவாகலாம் என மதிப்பிடுங்கள்.
2. ஏற்ற இறக்கத்தைக் கட்டுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை உணருங்கள்
பங்குசார் சொத்துகளுக்கு நீண்டகால வளர்ச்சி வாய்ப்பு இருந்தாலும், அவற்றின் மதிப்பு குறுகிய காலத்தில் பெரிதும் மாறலாம். பெரிய வீழ்ச்சியின் போது பதற்றத்தில் விற்பது, நீண்டகாலத் திட்டத்தைப் பாதிக்கக்கூடும். உங்கள் இலக்கு, காலவரம்பு, வருமான நிலைத்தன்மை மற்றும் இழப்பைத் தாங்கும் திறனுக்கு ஏற்ற சொத்து வகை ஒதுக்கீட்டைத் தேர்ந்தெடுப்பது முக்கியம்.
3. ஏற்ற இறக்கத்தைக் கட்டுப்படுத்தும் முறைகளைப் பின்பற்றுங்கள்
- கடன்சார் சொத்துக்களைப் (Debt asset class) புறக்கணிக்க வேண்டாம்: கடன்சார் சொத்துகள் பொதுவாகப் பங்குகளைவிட நிலைத்தன்மை அளிக்கலாம்; ஆனால் அவற்றிலும் வட்டி விகிதம், கடன் தரம் மற்றும் பணமாக்கும் வசதி தொடர்பான ஆபத்துகள் உள்ளன. எனவே அவற்றையும் கவனமாக ஒதுக்கீடு செய்யுங்கள்.
- பன்முகப்படுத்துங்கள் (Diversification): பங்குசார் சொத்துக்களை வாங்கும் போது ஒரே துறை/நாடு/நிறுவனத்தில் மட்டுமே வாங்காமல், பங்குசார் சொத்து வகைகளுக்கு இடையிலும், ஒவ்வொரு சொத்து வகைக்குள்ளும் பரவலாக ஒதுக்கீடு செய்யுங்கள்.
- மறுசீரமைப்பு செய்யுங்கள் (Rebalancing): சந்தை மாற்றங்களால் முதலீட்டுத் தொகுப்பு ஒதுக்கீடு இலக்கிலிருந்து விலகலாம். காலமுறைப்படி மதிப்பாய்வு செய்து, முன்கூட்டியே நிர்ணயித்த இலக்கிற்கு ஏற்ப ஒதுக்கீட்டை மறுசமநிலைப்படுத்தவும்.
வயதுக்குழு வாரியான மாதிரிச் சொத்து வகை ஒதுக்கீடு
கீழே உள்ள சதவீதங்கள் நீண்டகால இலக்குகளுக்கான மொத்த முதலீட்டுத் தொகுப்பைக் குறிக்கின்றன. அவசரத் தேவைக்கான பணம் மற்றும் அடுத்த சில ஆண்டுகளில் பயன்படுத்த வேண்டிய தொகையை இதிலிருந்து தனியாகத் திட்டமிடுங்கள்.
| வயதுக்குழு | பங்குசார் | கடன்சார் | மொத்தம் |
|---|---|---|---|
| 20–29 | 80% | 20% | 100% |
| 30–39 | 75% | 25% | 100% |
| 40–49 | 65% | 35% | 100% |
| 50–59 | 50% | 50% | 100% |
| 60+ | 30% | 70% | 100% |
20–29: நீண்ட காலவரம்பைப் பயன்படுத்துங்கள்
நீண்ட முதலீட்டுக் காலம் இருப்பதால், குறுகியகால ஏற்ற இறக்கங்களைத் தாங்கக்கூடியவர்களுக்குப் பங்குசார் சொத்துகளில் ஒப்பீட்டளவில் அதிக ஒதுக்கீடு வளர்ச்சி வாய்ப்பை வழங்கலாம். அதே நேரத்தில், பங்குச் சந்தை வீழ்ச்சியைச் சமாளிக்கக் கடன்சார் சொத்துகளையும் வைத்திருங்கள். முதலீட்டை ஒரே துறை அல்லது நிறுவனத்தில் குவிக்காமல் பன்முகப்படுத்துங்கள்.
30–39: பொறுப்புகள் அதிகரிக்கும் போது சமநிலையைப் பேணுங்கள்
குடும்பம், வீடு அல்லது பிற நீண்டகாலப் பொறுப்புகள் அதிகரிக்கக்கூடும். இலக்குகளுக்கான காலவரம்பையும் வருமான நிலைத்தன்மையையும் கருத்தில் கொண்டு, பங்குசார் சொத்துக்களுடன் கடன்சார் சொத்துக்களையும் போதுமான அளவில் வைத்திருங்கள். வருமானம் உயரும்போது முதலீட்டுத் தொகையையும் படிப்படியாக உயர்த்துவது பணவீக்கத்தை முறியடிக்க/எதிர்கொள்ள உதவும்.
40–49: வளர்ச்சியையும் நிலைத்தன்மையையும் இணையுங்கள்
ஓய்வூதியம் அல்லது கல்வி போன்ற பெரிய இலக்குகள் அருகில் வரத் தொடங்கலாம். ஒவ்வொரு இலக்கிற்கும் எத்தனை ஆண்டுகள் உள்ளன என்பதைப் பார்த்து, நீண்டகால இலக்குகளுக்கான ஒதுக்கீட்டைத் தொடரவும்; நெருங்கிய இலக்குகளுக்கான தொகையைப் படிப்படியாகக் குறைந்த ஏற்ற இறக்கமுள்ள சொத்துகளுக்கு நகர்த்தவும்.
50–59: பயன்படுத்தும் காலத்தை முன்னிட்டு ஆபத்தைக் குறையுங்கள்
ஓய்வூதியம் அல்லது பிற முக்கிய இலக்குகளுக்கான காலம் குறையும்போது, திடீர் சந்தை வீழ்ச்சியிலிருந்து பாதுகாப்பதற்காகக் கடன்சார் சொத்துகளின் பங்கை உயர்த்துவது உதவலாம். ஆனால் வயதை மட்டும் வைத்து எல்லாப் பங்குகளையும் விற்பது பொருத்தமானதல்ல; பயன்படுத்த இன்னும் நீண்ட காலம் உள்ள தொகைக்கு வளர்ச்சி வாய்ப்பும் தேவைப்படலாம்.
60 மற்றும் அதற்கு மேல்: வருமானத் தேவை மற்றும் நீண்ட ஆயுள் இரண்டையும் திட்டமிடுங்கள்
ஓய்வுக்குப் பிறகும் முதலீடு பல ஆண்டுகள் நீடிக்க வேண்டியிருக்கலாம். உடனடியாகத் தேவைப்படும் செலவுகளுக்கும் நீண்டகால வளர்ச்சிக்கும் தனித்தனியாகத் திட்டமிடுங்கள். பங்குகளின் பங்கு குறைந்திருந்தாலும், பணவீக்கத்தையும் நீண்டகால வாழ்நாள் தேவைகளையும் எதிர்கொள்ள வளர்ச்சி வாய்ப்புள்ள சொத்துகளுக்கு ஒரு பங்கை வைத்திருப்பது பொருத்தமாக இருக்கலாம். பணமெடுக்கும் தேவையை மதிப்பிட்டு, தொகுப்பை அவ்வப்போது மறுசீரமைக்கவும்.
ஓய்வூதிய நிதித் திட்டமிடல் கணிப்பானில் ஓய்வுக்கான நிதித் தேவையையும் தற்போதைய சேமிப்பின் பங்களிப்பையும் மதிப்பிடுங்கள்.
ஒதுக்கீட்டை உங்கள் இலக்குகளுக்கு ஏற்ப மாற்றுவது எப்படி?
- வயது ஒரு குறியீடு மட்டுமே: இலக்கை அடைய வேண்டிய காலம், வருமானம் மற்றும் செலவுகளின் நிலைத்தன்மை, சார்ந்திருப்போர், கடன், அவசர நிதி மற்றும் இழப்பைத் தாங்கும் மனநிலை ஆகியவற்றையும் கணக்கில் கொள்ளுங்கள்.
- இலக்குகளுக்குத் தனித்த காலவரம்பு அமையுங்கள்: அடுத்த சில ஆண்டுகளில் பயன்படுத்த வேண்டிய பணத்தை நீண்டகாலப் பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்திற்கு உட்படுத்த வேண்டாம். இலக்கு நெருங்கும்போது அதற்குரிய தொகையின் ஆபத்தைப் படிப்படியாகக் குறையுங்கள்.
- பங்குகளைப் பன்முகப்படுத்துங்கள்: நாடு, துறை, நிறுவன அளவு மற்றும் பல்வேறு நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு இடையே பரவலாக வைத்திருப்பதை நோக்குங்கள்; ஒரே பகுதியில் குவிவதைத் தவிர்க்கவும்.
- கடன்சார் சொத்துகளையும் பன்முகப்படுத்துங்கள்: கடன் தரம் மற்றும் காலநீள ஆபத்தைப் புரிந்து, ஒரே வகையில் குவிவதைத் தவிர்க்கவும். “கடன்” என்பதால் மதிப்பு மாறாது அல்லது வருமானம் உறுதி என்று கருத வேண்டாம்.
- மறுசீரமைப்புக்கான விதியை முன்கூட்டியே அமையுங்கள்: ஆண்டுக்கு ஒருமுறை அல்லது இலக்குப் பங்கீட்டிலிருந்து குறிப்பிடத்தக்க விலகல் ஏற்பட்டால் மதிப்பாய்வு செய்யலாம். விலை உயர்ந்த சொத்துகளைத் தொடர்ந்து வாங்குவதற்குப் பதிலாக, இலக்குப் பங்கீட்டுக்குத் திரும்புவது ஆபத்தை ஒழுங்குபடுத்த உதவும்.
இலக்கு அடிப்படையிலான முதலீட்டுக் கணிப்பானில் இலக்குத் தொகை, பணவீக்கம், தற்போதைய முதலீடு மற்றும் காலவரம்பின் அடிப்படையில் தேவையான மாதாந்திர SIP-யைக் கணக்கிடுங்கள்.
நினைவில் கொள்ளுங்கள்
இந்தச் சதவீதங்கள் அனைவருக்கும் பொருந்தும் ஒரே தீர்வு அல்ல; எதிர்கால வருமானத்திற்கான உத்தரவாதமும் அல்ல. உங்கள் இலக்குகள், காலவரம்பு, ஆபத்தைத் தாங்கும் திறன் மற்றும் மொத்த நிதிநிலையை வைத்து அவற்றை மாற்ற வேண்டும். பெரிய முடிவுகளுக்கு முன் தகுதியான, SEBI ஒழுங்குமுறை அமைப்பில் பதிவு பெற்ற நிதி ஆலோசகரின் உதவியைப் பெறுவதையும் பரிசீலிக்கலாம்.
SEBI பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைப் பற்றிய பதிவை மேலும் படிக்கவும்.