தனிநபர் நிதிநிதித் திட்டமிடல்நிதிப் பாதுகாப்புஅவசர நிதிகாப்பீடு

தனிநபர் நிதிநிலை வலுவூட்டல்

அவசர நிதி முதல் குடும்ப ஆவணப் பாதுகாப்பு வரை, நிதி நலனை முழுமையாக மதிப்பாய்வு செய்வதற்கான ஆறு முக்கியப் பிரிவுகள்.

நிதி நலன் என்பது முதலீடுகளைத் தேர்ந்தெடுப்பது மட்டுமல்ல. எதிர்பாராத செலவுகளைச் சமாளித்தல், குடும்பத்தைப் பாதுகாத்தல், கடனைக் கட்டுப்படுத்துதல், நீண்டகால இலக்குகளுக்காகச் சேமித்தல், முக்கிய ஆவணங்களை ஒழுங்குபடுத்துதல் ஆகியவை ஒன்றோடொன்று தொடர்புடையவை. இந்த ஆறு பிரிவுகளையும் அவ்வப்போது மதிப்பாய்வு செய்வது, உங்கள் நிதித் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை முன்கூட்டியே கண்டறிய உதவும்.

1. அவசரகாலப் பாதுகாப்பு நிதி

வேலை இழப்பு, மருத்துவச் செலவு அல்லது வீட்டு உபகரணப் பழுது போன்ற திட்டமிடாத நிகழ்வுகள் வருமானத்தையும் செலவுகளையும் பாதிக்கலாம். அப்போது முதலீடுகளைத் தகாத நேரத்தில் விற்கவோ, அதிக வட்டிக் கடன் வாங்கவோ வேண்டிய நிலையைத் தவிர்க்க, உடனடியாகப் பயன்படுத்தக்கூடிய அவசர நிதி உதவுகிறது.

மாதாந்திர அத்தியாவசியச் செலவுகளைக் கணக்கிட்டு, குடும்பத்தின் வருமான நிலைத்தன்மை மற்றும் பொறுப்புகளுக்கு ஏற்ற இலக்கை அமைக்கவும். இந்தப் பணத்தை நீண்டகால முதலீடுகளிலிருந்து பிரித்து, தேவைப்படும் போது எளிதில் எடுக்கக்கூடிய இடங்களில் வைத்திருங்கள். இதனை ஒரு தனி வங்கிக் கணக்கிலோ அல்லது வைப்பு நிதியாகவோ சேமித்து வைக்கலாம். வங்கி இணையச் சேவை அல்லது மின்னணுப் பணப்பரிவர்த்தனைகள் தடைப்படும் போது பயன்படுத்துவதற்காகச் சிறிதளவு ரொக்கத்தையும் வீட்டில் பாதுகாப்பாக வைத்திருக்கலாம்.

குறைந்தபட்சம், உங்கள் ஆறு மாத அத்தியாவசியச் செலவுத் தொகையை உங்கள் அவசரகாலப் பாதுகாப்பு நிதியாக வைத்திருங்கள்.

அவசரகால நிதித் திட்டமிடல் கணிப்பானில் உங்கள் மாதச் செலவுகள், இலக்கு மாதங்கள் மற்றும் தற்போதைய சேமிப்பின் அடிப்படையில் தேவையான நிதியையும் மாதச் சேமிப்பையும் கணக்கிடுங்கள்.

2. மருத்துவக் காப்பீடு

ஒரு பெரிய மருத்துவச் செலவு பல ஆண்டுகளாகச் சேமித்த பணத்தைக் குறைக்கக்கூடும். எனவே, உங்கள் வேலை நிறுவனம் வழங்கும் குழுக் காப்பீட்டை மட்டும் சார்ந்திருக்காமல், குடும்பத் தேவைகளுக்கு ஏற்ற தனிப்பட்ட மருத்துவக் காப்பீட்டையும் பரிசீலிக்கவும். வேலை அல்லது பணியிடம் மாறினால் குழுக் காப்பீடு தொடராமல் போகலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

பாலிசியைத் தேர்ந்தெடுக்கும் முன் காப்பீட்டுத் தொகை, காத்திருப்புக் காலம், ஏற்கெனவே உள்ள நோய்களுக்கான விதிகள், அறை வாடகை வரம்புகள், விலக்குகள், இணைக் கட்டணம், நீங்கள் செல்ல விரும்பும் மருத்துவமனை உங்கள் காப்பீட்டு நிறுவனத்தின் நெட்ஒர்க்கில் உள்ளதா என்பதையும் கவனிக்கவும். பெரிய சிகிச்சைச் செலவுகளுக்காகச் சூப்பர் டாப்-அப் போன்ற கூடுதல் பாதுகாப்பு பொருத்தமா என்பதையும் ஒப்பிட்டுப் பாருங்கள். பெற்றோரின் வயது மற்றும் உடல்நலத் தேவைகள் வேறுபட்டால், அவர்களுக்கான தனிக் காப்பீட்டைப் பெறுவது உதவலாம்.

மருத்துவக் காப்பீட்டில் பணமில்லாக் காப்புறுதி இழப்பீட்டுக் கோரிக்கை (cashless claim) என்பது ஒரு சலுகையே தவிர உரிமையல்ல என்பதை நினைவில் கொள்க. மருத்துவச் செலவுக்கான பணத்தைத் திரும்பப் பெற உங்களுக்கு உரிமையுண்டு. எனவே cashless claim கோரிக்கைக்கு எப்பொழுதும் ஒப்புதல் கிடைக்கும் எனக் கருத வேண்டாம். அதாவது, மருத்துவமனையில் நீங்கள் பணம் கட்டிப் பின்னர் அதனை இழப்பீடாகக் கோரித் திரும்பப் பெற வேண்டிய சூழல் ஏற்படலாம். இந்தச் சூழலில் மேற்கூறிய அவசரகாலப் பாதுகாப்பு நிதி உங்களுக்கு உதவும்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னும் பின்னும் செய்ய வேண்டிய செயல்களைக் குறித்து வைக்க வேண்டும். இவற்றோடு, மருத்துவக் காப்பீட்டுப் பத்திரம் மற்றும் காப்பீட்டு அடையாள அட்டையையும் சேர்த்து வைக்க வேண்டும். இவற்றை உங்கள் வாழ்க்கைத்துணையும் குடும்ப உறுப்பினர்களும் புரிந்துகொள்வது சாலச்சிறந்தது.

3. ஆயுள் காப்பீடு (காலவரையறைக் காப்பீடு / Term Insurance)

ஒரு குடும்பத்தலைவன் / குடும்பத்தலைவியின் எதிர்பாராத மரணம், குடும்பத்தில் பேரிடியாய் விழும். அவர்கள் உங்களை இழந்து தவிப்பதோடு மட்டுமன்றி உங்கள் வருவாய் இல்லாத காரணத்தினால் வறுமையில் வாட நேரிடும். அவர்கள் வாழ்வில் அடைய வேண்டிய இலக்குகளான குழந்தைகள் கல்வி, குழந்தைகள் திருமணம், வாழ்க்கைத்துணையின் வயதான காலத் தேவைகள் போன்றவற்றை அடைய மிகவும் சிரமப்படுவர். இவற்றைத் தவிர்க்கச் சம்பாதிக்கும் ஒவ்வொரு குடும்பத்தலைவனும் / குடும்பத்தலைவியும் கண்டிப்பாக ஆயுள் காப்பீடு பெற வேண்டும்.

உங்கள் வருமானத்தைச் சார்ந்திருப்பவர்கள் குடும்பத்தில் இருந்தால், நீங்கள் இல்லாத சூழலில் குடும்பத்தின் அத்தியாவசியச் செலவுகள், நிலுவைக் கடன்கள் மற்றும் எதிர்கால இலக்குகள் எவ்வாறு சமாளிக்கப்படும் என்று முன்கூட்டியே திட்டமிடுவது அவசியம். குடும்பத்தின் தேவைகளையும் ஏற்கெனவே உள்ள சொத்துகள் மற்றும் காப்பீட்டையும் கணக்கில் கொண்டு, போதுமான ஆயுள் காப்பீட்டைப் பரிசீலிக்கவும்.

ஆயுள் காப்பீட்டைப் பொறுத்தவரை இந்த வகைக் காப்பீட்டை மட்டுமே வாங்க வேண்டும். மற்ற வகைகளைப் பற்றிக் கண நேரம் கூட நீங்கள் யோசிக்க வேண்டாம். குறைந்த காப்பீட்டுத் தவணைத்தொகைக்கு (Insurance Premium) அதிகத் தொகையளவு கொண்ட காப்புறுதியைத் தரும் ஒரே காப்பீட்டு வகை இது. பொதுவாக ஆண்டுக்கு ஒரு முறை காப்பீட்டுத் தவணைத்தொகையைச் செலுத்த வேண்டும்.

காப்பீட்டுக் காலம் முடியும்வரை நீங்கள் செலுத்தும் காப்பீட்டுத் தவணைத்தொகையின் மொத்தமும் உங்கள் காப்புறுதித் தொகையின் ஒரு சிறிய அளவே. மொத்தக் காப்புறுதித் தொகையையும் நீங்கள் கட்டத் தேவையில்லை. இதுவே அதிகக் காப்புறுதித் தொகை குறைந்த காப்பீட்டுத் தவணைத்தொகைக்குக் கிடைக்கக் காரணம்.

முகவர்கள் (Insurance Agents) உதவியின்றி காப்பீட்டு நிறுவனத்தின் இணைய தளத்தில் நேரடியாக வாங்கலாம். முகவர்கள் தரகு (Agent Commission) இல்லாத காரணத்தினால் காப்பீட்டுத் தவணைத்தொகை கணிசமாகக் குறையும்.

காப்பீட்டுக் காலம் முடிவதற்குள் ஒருவேளை நீங்கள் மரணிக்க நேர்ந்தால், முழுக் காப்புறுதித் தொகையும் உங்கள் நாமினியிடம் ஒப்படைக்கப்படும். மேற்கொண்டு உங்கள் குடும்பம் காப்பீட்டுத் தவணைத்தொகை செலுத்தத் தேவையில்லை.

அவ்வாறன்றி காப்பீட்டுக் காலம் முடியும் வரை நீங்கள் உயிரோடு இருந்தால் (இது நடக்க வேண்டும் என வேண்டிக்கொள்ளுங்கள்), கட்டிய காப்பீட்டுத் தவணைத்தொகை உங்களுக்குத் திரும்பக் கிடைக்காது. உங்களுக்கு ஆயுள் கெட்டி என நீங்களே உங்கள் தோளில் தட்டிக்கொள்ளுங்கள்.

காப்பீட்டு விண்ணப்பத்தில் உடல்நிலை, புகைபிடித்தல் உள்ளிட்ட பழக்கங்கள், மருத்துவ வரலாறு ஆகியவற்றை முழுமையாகவும் சரியாகவும் தெரிவிக்கவும். நாமினி விவரங்களையும் அவ்வப்போது சரிபார்க்கவும்.

தேவை அடிப்படையிலான காப்பீட்டுத் தொகையைத் தீர்மானிக்க இந்தக் கணிப்பேட்டைப் பயன்படுத்தவும்.

4. கடன் நிலுவைக் குறைப்பு

கடனின் வட்டி, தவணை மற்றும் காலம் ஆகியவை மாதாந்திரப் பணப்புழக்கத்தைப் பாதிக்கின்றன. குறிப்பாக கிரெடிட் கார்டு நிலுவை, தனிநபர் கடன் அல்லது பிற அதிக வட்டிக் கடன்கள் நீடித்தால், சேமிக்கவும் முதலீடு செய்யவும் கிடைக்கும் தொகை குறையலாம். எல்லாக் கடன்களின் நிலுவை, வட்டி விகிதம், குறைந்தபட்சத் தவணை மற்றும் கட்டணத் தேதிகளை ஒரே இடத்தில் பட்டியலிட்டு, திருப்பிச் செலுத்தும் திட்டம் அமைக்கவும்.

புதிய கடன் எடுக்கும் முன் அதன் மொத்தச் செலவையும், அனைத்து EMI-களையும் செலுத்திய பின் அத்தியாவசியச் செலவுகளுக்கும் சேமிப்புக்கும் போதிய பணம் மீதமிருக்கிறதா என்பதையும் கணக்கிடுங்கள். கடன் தவணைகளைத் தவறாமல் செலுத்துவது கடன் வரலாற்றைப் பாதுகாக்க உதவும். வீட்டுக்கடன் போன்ற நீண்டகாலக் கடன்களில் முன்கூட்டிச் செலுத்துவது பொருத்தமா என்பதை, வட்டிச் சேமிப்பு, கட்டணங்கள் மற்றும் பிற நிதி இலக்குகளுடன் ஒப்பிட்டு முடிவெடுக்கவும்.

5. சொத்து வகை ஒதுக்கீட்டுத் திட்டம் (Asset Allocation)

அவசரத் தேவைகளுக்கும் காப்பீட்டுக்கும் ஏற்பாடு செய்த பிறகு, நீண்டகால இலக்குகளுக்கான முதலீட்டைத் திட்டமிடலாம். ஒவ்வொரு இலக்குக்கும் தேவையான காலம், ஏற்றுக்கொள்ளக்கூடிய ஏற்ற இறக்கம், முதலீட்டாளரின் சூழ்நிலை ஆகியவற்றைப் பொறுத்து பங்குகள், கடன் சார்ந்த முதலீடுகள் மற்றும் பிற சொத்து வகைகளுக்கிடையே ஒதுக்கீட்டைத் தீர்மானிக்கவும்.

மாதந்தோறும் ஒழுங்காக முதலீடு செய்வது ஒரு நடைமுறை அணுகுமுறை; SIP என்பது சந்தை வருமானத்துக்கு உத்தரவாதமல்ல. வருமானம் உயரும்போது பங்களிப்பைப் படிப்படியாக அதிகரிப்பது நீண்டகால இலக்குகளுக்கு உதவலாம். EPF, PPF போன்ற கருவிகளின் விதிகள், காலவரம்பு, வரி விளைவுகள் மற்றும் பணம் எடுக்கும் நிபந்தனைகளைப் புரிந்து முதலீட்டைத் திட்டமிடுங்கள். தங்கம் உள்ளிட்ட எந்த ஒரு சொத்து வகையிலும் அதிகமாக முதலீடு செய்யாமல், உங்கள் இலக்கு ஒதுக்கீட்டுடன் ஒப்பிட்டு அவ்வப்போது மறுசீரமைக்கவும்.

6. வாரிசுரிமை, ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு

நிதித் திட்டம் உங்கள் வாழ்நாளில் மட்டுமல்லாமல், எதிர்பாராத சூழலிலும் குடும்பத்தினர் சொத்துகள் மற்றும் கணக்குகளை அணுகவும் நிர்வகிக்கவும் உதவ வேண்டும். வங்கிக் கணக்குகள், முதலீடுகள், ஓய்வூதியக் கணக்குகள் மற்றும் காப்பீட்டுப் பாலிசிகளில் உள்ள நாமினி விவரங்கள் சரியானவையா என்று சரிபார்க்கவும். நாமினி நியமனம் மட்டும் எல்லா சூழல்களிலும் வாரிசுரிமைத் திட்டத்திற்கு மாற்றாகாது; உங்கள் குடும்ப மற்றும் சொத்து நிலைக்கு ஏற்ற உயில் ஒன்றை எழுதி வைக்கவும்.

முக்கியமான கணக்குகள், பாலிசிகள், சொத்துப் பத்திரங்கள் மற்றும் தொடர்பு விவரங்கள் எங்கே உள்ளன என்பதை நம்பகமான குடும்ப உறுப்பினர் அறிந்திருப்பதை உறுதி செய்யுங்கள். ஆதார், PAN, காப்பீட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பிற முக்கிய ஆவணங்களைப் பாதுகாப்பான இடத்தில் ஒழுங்குபடுத்துங்கள். கடவுச்சொற்கள், PIN அல்லது OTP போன்ற ரகசியங்களைப் பாதுகாக்கக் கடவுச்சொல் மேலாளர் கருவியைப் பயன்படுத்தவும்.

உங்கள் நிதிநிலையை மதிப்பாய்வு செய்யுங்கள்

இந்த ஆறு பிரிவுகளையும் ஒரே அமர்வில் முடிக்க வேண்டியதில்லை. முதலில் அதிக ஆபத்து அல்லது அவசரத் தேவையுள்ள இடங்களை அடையாளம் கண்டு, ஒவ்வொரு பிரிவுக்கும் அடுத்த செயலையும் அதை முடிக்க வேண்டிய காலத்தையும் குறித்துக் கொள்ளுங்கள். உங்கள் வருமானம், குடும்பப் பொறுப்புகள் மற்றும் இலக்குகள் மாறும்போது திட்டத்தையும் புதுப்பிக்கவும்.

தனிநபர் நிதிநிலை வலுவூட்டல் சரிபார்ப்புப் பட்டியலைத் திறந்து, 25 அம்சங்களையும் மதிப்பாய்வு செய்யுங்கள்.

இந்தக் கட்டுரை கல்வி மற்றும் விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே; தனிப்பட்ட நிதி, காப்பீடு, சட்ட அல்லது வரி ஆலோசனை அல்ல. உங்கள் சூழ்நிலைக்கு ஏற்ற முடிவுகளுக்குத் தகுதியான நிபுணரை அணுகுங்கள்.

தொடர்புடைய கட்டுரைகள்

ஓய்வூதியம் ஆனுவிட்டி (Annuity) ஓய்வூதியத் திட்டங்கள்: வகைகள், NPS விதிகள், சிறந்த நிறுவனங்கள் மற்றும் மாற்றுகள் கட்டுரையைப் படிக்க ↗ மியூச்சுவல் நிதித் திட்டம் வழக்கமான vs நேரடி மியூச்சுவல் நிதித் திட்டம் (Regular vs Direct Mutual Fund) கட்டுரையைப் படிக்க ↗ முதலீடு முதலீட்டை எவ்வாறு தொடங்குவது? கட்டுரையைப் படிக்க ↗